சூர்யகுமார் சதம் விளாச மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா (11) சுமாரான துவக்கம் தந்தார். அன்ஷுல் கம்போஜ் வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார் டிராவிஸ் ஹெட். மயங்க் அகர்வால் (5) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய ஹெட், 30 பந்தில் 48 ரன் எடுத்தார். நிதிஷ் குமார் ரெட்டி (20) ஆறுதல் தந்தார். கிளாசன் (2) சோபிக்கவில்லை. பாண்ட்யா ‘வேகத்தில்’ மார்கோ ஜான்சென் (17), ஷாபாஸ் அகமது (10) வெளியேறினர். அப்துல் சமத் (3) நிலைக்கவில்லை. சாவ்லா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட கேப்டன் கம்மின்ஸ், துஷாரா வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார்.
ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்தது. கம்மின்ஸ் (35), சன்விர் சிங் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு இஷான் கிஷான் (9), ரோகித் சர்மா (4), நமன் திர் (0) ஏமாற்றினர். பின் இணைந்த சூர்யகுமார் யாதவ் (செல்லமாக சூர்யா), திலக் வர்மா ஜோடி நம்பிக்கை தந்தது. கம்மின்ஸ் வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார் திலக். மார்கோ ஜான்சென் வீசிய 7வது ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர் விளாசிய சூர்யகுமார், 30 பந்தில் அரைசதம் எட்டினார். புவனேஷ்வர் குமார் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட சூர்யகுமார், ஷாபாஸ் அகமது பந்தில் 2 பவுண்டரி விரட்டினார்.
நடராஜன் பந்தை சிக்சருக்கு அனுப்பி சூப்பராக சதம் விளாசிய சூர்யகுமார் வெற்றியை உறுதி செய்தார். மும்பை அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 174 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் (102 ரன், 6 சிக்சர், 12 பவுண்டரி), திலக் (37) அவுட்டாகாமல் இருந்தனர்.