தேசிய சட்டப் பல்கலைகளுக்கான பொது நுழைவுத் தேர்வு கட்டணத்தை குறைக்க தாக்கலான வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
திருச்சி வளன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்சியிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலையில் படிக்கிறேன். இந்தியாவில் 22 தேசிய சட்டப் பல்கலைகள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு (கிளாட்) நடக்கிறது.
இதற்கு விண்ணப்பக் கட்டணம் ஓ.பி.சி., பிரிவினருக்கு ரூ.4000, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.3500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2018 ல் இத்தேர்வை நடத்த மொத்த வருவாயில் 5 முதல் 7 சதவீதம் செலவானது. அதிக கட்டணம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவு மற்றும் அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு சுமையாக உள்ளது. பிற துறை சார்ந்த படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு கட்டணத்தைவிட அதிகம்.
‘கிளாட்’ தேர்வில் லாப நோக்குடன் செயல்படக்கூடாது. பாகுபாடின்றி மாணவர்களுக்கு தரமான சட்டக் கல்வியை சேவை நோக்கில் வழங்க வேண்டும். ‘கிளாட்’ தேர்வு விண்ணப்பக் கட்டணத்தைக் குறைக்கக்கோரி மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு மத்திய சட்டத்துறை செயலர், கல்வித்துறை செயலர், தேசிய சட்டப் பல்கலைகளின் கூட்டமைப்பு செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 6 வாரங்கள் ஒத்திவைத்தது.