டி-20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரிஷாப் பன்ட், துபே, சாம்சன் வாய்ப்பு பெற்றனர். ராகுல் சேர்க்கப்படவில்லை.
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 9வது ‘டி-20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர், ஜூன் 2-29ல் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணித் தேர்வு நேற்று ஆமதாபாத்தில் நடந்தது. இந்திய கிரிக்கெட் போர்டு செயலர் ஜெய் ஷா, தேர்வுக்குழு தலைவர் அகார்கர் பங்கேற்றனர்.
முடிவில் 15 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா, துணைக் கேப்டனாக ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா தொடர்கின்றனர். இங்கிலாந்து தொடரில் அசத்திய ஜெய்ஸ்வால் இடம் பிடித்தார். இதேபோல ஐ.பி.எல்., தொடரில் ‘நம்பர்-1’ பேட்டராக தொடரும் கோலி (10 போட்டி, 500 ரன்), சூர்யகுமார் வாய்ப்பு பெற்றனர். துவக்க வீரர் சுப்மன் கில். மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியான விஷயம். சென்னை அணி கேப்டன் ருதுராஜும் (9ல் 447 ரன்) புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
ரிஷாப் வருகை
கார் விபத்தில் சிக்கி மீண்டு வந்த ரிஷாப் பன்ட், விக்கெட் கீப்பராக இடம் பிடித்தார். இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்தை சஞ்சு சாம்சன் தட்டிச் சென்றார். இதனால் லோகேஷ் ராகுல், இஷான் கிஷானுக்கு இடமில்லாமல் போனது. சென்னை அணிக்காக அசத்தி வரும் ஷிவம் துபே, முதன் முறையாக ‘உலக’ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சகால் வாய்ப்பு
வேகப்பந்து வீச்சுக்கு பும்ரா தலைமை ஏற்கிறார். முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டனர். சுழற்பந்து வீச்சாளர் சகால், மீண்டும் சேர்க்கப்பட்டார். குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜடேஜா வழக்கம் போல இடம் பிடித்துள்ளனர்.
யார்… யார்
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், கோலி, சூர்யகுமார், ரிஷாப் பன்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சகால், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சிராஜ்.
* மாற்று வீரர்கள்
சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான்.
சுப்மன் கில் ‘ஷாக்’
மூன்றுவித கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படுபவர் துவக்க வீரர் சுப்மன் கில். இம்முறை இவர், மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்துள்ளது.
ஐ.பி.எல்., தொடருக்கு முன் சிறப்பாக (15 ‘டி-20’ல் சராசரி 176.23 ரன்) செயல்பட்டார் ரிங்கு சிங். ஆனால் சிக்சர் துபேயிடம் இடத்தை பறிகொடுத்தார். ஐ.பி.எல்., தொடரில் கடைசி கட்ட ஓவர்களில் அசத்தும் கலீல் அகமது, அவேஷ் கானுக்கும் முக்கிய அணியில் இடம் கிடைக்கவில்லை.
தேறுமா ‘டாப் ஆர்டர்’
ரோகித் சர்மா, கோலி என ‘டாப் ஆர்டர்’ வீரர்கள் முந்தைய உலக தொடரில் ‘டி-20’ போட்டிக்கு ஏற்ப அதிவேக ரன் குவிப்பை தரவில்லை என விமர்சனம் உள்ளது. மீண்டும் அதே வீரர்கள் தேர்வான நிலையில், இம்முறை எப்படி செயல்பட போகின்றனர் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. துவக்க வீரராக அதிக ரன் குவித்து வரும் சென்னை அணி கேப்டன் ருதுராஜும் (9ல் 447 ரன்) புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
மும்பை ஆதிக்கம்
ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார், பும்ரா என நான்கு மும்பை வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்துக்கு ‘நோ’
தமிழக வீரர் சாய் சுதர்சன், சாய் கிஷோர், நடராஜன் உள்ளிட்டோர் ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக செயல்படுகின்றனர். இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை
மீண்டும் ஆர்ச்சர்
‘டி-20’ உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி: பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோவ், சாம் கர்ரான், லிவிங்ஸ்டன், பில் சால்ட், வில் ஜாக்ஸ், டாப்லே, ஹாரி புரூக், டக்கெட், ஹார்ட்லே, ஜோர்டான், ரஷித், மார்க் உட், ஆர்ச்சர்.
கேப்டன் மார்க்ரம்
‘டி-20’ உலக கோப்பைக்கான தென் ஆப்ரிக்க அணி: மார்க்ரம் (கேப்டன்), பார்ட்மன், கோயட்சீ, குயின்டன் டி காக், போர்டுய்ன், ஹென்றிக்ஸ், ஜான்சென், கிளாசன், மஹாராஜ், மில்லர், நார்ட்ஜே, ரபாடா, ரிக்கிள்டன், ஷம்சி, ஸ்டப்ஸ்.
* மாற்று வீரர்கள்: பர்கெர், லுங்கிடி